அரபு லீக் அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்தப்பட்ட சிரியாவை மீண்டும் அந்த அமைப்பில் இணைப்பதற்கு அதன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
கெய்ரோவில் உள்ள தலைமையகத்தில் கடந்த ஞாயிறன்று (07) இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே சிரியாவை இணைக்க ஆதரவு கிடைத்துள்ளது.
எதிர்வரும் மே 19 ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள அரபு லீக் உச்சிமாநாட்டை ஒட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதோடு சிரியாவுடனான பிராந்திய நாடுகளின் உறவு அண்மைக்காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரபு லீக்கின் இந்த முடிவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க கடந்த 2011 மார்ச் மாதத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உத்தரவிட்டதை அடுத்தே அரபு லீக் சிரியாவை இடைநிறுத்தியது. இந்த ஒடுக்குமுறை சிரியாவில் சிவில் யுத்தமாக வெடித்தது.
இந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் கொல்லப்பட்டு மேலும் 23 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
சிரியாவின் உள்நாட்டுப் போரால் உருவான நெருக்கடிக்கு இன்னமும் தீர்வுகாணப்படாத நிலையிலேயே அது மீண்டும் அரபு லீக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அரபு லீக் தலைமைச் செயலாளர், ஜோர்தான், சவூதி அரேபியா, ஈராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட அமைச்சர் நிலைக் குழு அமைக்கப்படும். அது சிரியாவுடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும்.
பிராந்திய பிரச்சினைகள் உட்பட, பூசலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பெருந்திட்டத்தை ஜோர்தான் வரைந்துள்ளது. நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகாண்பதில் சிரியா ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஜோர்தான் வலியுறுத்தியது.










