மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் , அனைத்து பதவிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் உறுதிப்படுத்தினார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (19.03.2021) முன்னணியின் பிரதான காரியாலய மண்டபத்தில் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகித்த பொழுதிலும் 64 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இதன்போது கலந்துரையாடப்பட்ட, எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
01. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அ.அரவிந்தகுமார் கட்சியின் கொள்கையை மீறி 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை கட்சியின் கொள்கையை மீறும் செயலாக கருதப்பட்டது.
02. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவ்விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்ற கவுன்சில் தீர்மானத்தை மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.
03. அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் மற்றும் அங்கத்துவ உறுப்புரிமை என்பன இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் தலைமைக்காரியாலயத்திற்கு அத்துமீறி அலுவலக பணியில்; ஈடுபட்டமை மத்தியகுழு மற்றும் கவுன்சிலின் தீர்மானத்தை மீறியதாக மத்தியகுழு தீர்மானித்தது.
04. இதன் அடிப்படையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி உறுப்புரிமையிலிருந்தும் மற்றும் மலையக மக்கள் முன்னணிஇஇ மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்கப்பட்டதாக மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானங்கள மேற்கொள்ளப்பட்ட பொழுது பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறிய நிலையில் ஏனைய அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.