“லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது. எமது மக்களுக்கு காணி உரிமையே வேண்டும், மாறாக லயன் பகுதியிலேயே அவர்கள் முடக்கப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் தெரிவித்தார்.
“ நாங்கள் அமைதியாக நாகரீக அரசியலை நடத்துகின்றோம். கருத்தியல் ரீதியில் மோதுவோம், அதைவிடுத்து அடிதடி அரசியலுக்கு அழைப்பது ஏற்புடையது அல்ல. எங்களின் பொறுமையைiயும் சோதிக்க கூடாது, எங்கள் பக்கம்தான் மலையகத்தில் அதிக இளைஞர்கள் உள்ளனர்.” எனவும் திகா கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நல்லாட்சி அரசில் நிலஉரிமையுடன் கிராமம் அமைத்தோம். அதனை தொடர்ந்து முன்னெடுங்கள் என ஜனாதிபதியிடம் நேரில் கூறினோம். லயன்களையே கிராமங்களாக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது எனவும் அறிவித்தோம்.
எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும், மக்களும் அதனையே கோருகின்றனர். மாறாக லயத்தை பற்றி மக்கள் பேசவில்லை பேசவில்லை.
இதொகாவினர் முதலில் மாடி வீடு கட்டினர், தற்போது லயன்களை கிராமங்களாக்குவதற்கு முற்படுகின்றனர். இதற்கு எம்மால் உடன்பட முடியாது.
ஜனாதிபதியிடம் ஒன்றையும், வெளியில் வந்து வேறொன்றையும் நாம் பேசவில்லை. உள்ளதை உள்ளபடியே பேசினோம். நாங்கள் எவருக்கும் பயந்தவர்கள் அல்லர். மக்களோடு மக்களாக வாழ்கின்றோம். எனவே, ஆட்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துவது நாகரீக அரசியல் கிடையாது.
சஜித் பிரேமசமாச தலைமையில் அமையும் அரசில் நில உரிமை நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும், எமது தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.
மக்கள் யார் பக்கம் என்பது அடுத்த தேர்தலில் தெரியவரும். கடந்தமுறை அறுவர் போட்டியிட்டு அறுவரும் வெற்றிபெற்றோம். நாங்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லர், தோட்டத்தில் பிறந்தவர்கள், எனவே, அமைதியாக கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
பிழைகள் இருந்தால் விமர்சனம் செய்வதுதான் அரசியல், அவ்வாறு விமர்சனம் செய்யும்போது வன்முறைக்கு அழைப்பது ஏற்புடையது அல்ல. அதேபோல நாங்கள் பயந்துகொண்டு அரசியல் நடத்துபவர்கள் அல்லர் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.” – என்றார்.
