அறகலயவின்போது நடந்தது என்ன? முன்னாள் சபாநாயகர் பகீர் தகவல்!

அறகலயவின்போது எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தாலும் அரசமைப்பைமீறி செயற்படவில்லை. என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை அரசமைப்பைமீற மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் பதவியை ஏற்குமாறு நானே ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தேன் என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அறகலய தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பங்களாதேசில் போராட்டம் நடந்தது , ஆயிரத்து 400 பேர்வரை கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்த கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை. அவர் ஜனநாயகத்தை ஏற்றார். நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் இவ்வாறு சென்று 12 மணிநேரத்துக்கு பின்னரே அது பற்றி எனக்கு தெரியும். அதுவரையில் நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்கவில்லை. நிர்வாகம் யாரின் கைகளில் என தெரியவில்லை. யார் எங்கிருக்கின்றனர் என்பது புரியாது இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவும், ஜீ.எல்.பீரிசும் மட்டுமே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானித்தேன். 3 எம்.பிக்களை தொடர்புகொண்டேன். அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் கோரினர். கடைசியில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாமல்போனது

இக்காலப்பகுதியில் ஜனாதிபதி இருக்கவில்லை, பிரதமர் இருக்கவில்லை. அமைச்சரவை இருக்கவில்லை. சபாநாயகர் என்ற வகையில் எனக்கு மட்டுமே பதவி இருந்தது. முப்படை தளபதிகள் எனது வீட்டுக்கு வந்தனர். எனக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறினேன்.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் எரித்து விட்டனர். பிரதமர் பதவியை ஏற்குமாறு நானே அவரிடம் கோரிக்கை விடுத்தேன். திட்டு வாங்கிக்கொண்டாவது அவர் அந்த சவாலை விடுத்தார்.

அறகலயவின்போது சபாநாயகர் வீட்டில் இருந்து என்னை நாடாளுமன்றம் அழைத்து சென்றனர். அங்கிருந்து இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தார்.

பல நெருக்கடிகளை அன்று எதிர்கொண்டிருந்தாலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. பங்களாதேஸ், லிபியா போன்ற நாடுகளில் என்ன நடந்தது?

ஆட்சியை பொறுப்பேற்குமாறு என்னிடம் கோரினர். நான் நாட்டை பற்றி மட்டுமே சிந்தித்தேன். அறகலய ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வேறு, இடையில் அது திசைமாறிவிட்டது. ”என்றார்.

Related Articles

Latest Articles