அறகலய காலப்பகுதியிலேயே நாட்டில் குற்றச்செயல்கள் தலைவிரிப்பு!

அறகலய காலப்பகுதியிலேயே நாட்டில் போதைப்பொருள், பாதாள கோஷ்டி செயற்பாடுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்தன – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அத்துடன், பாதாள கோஷ்டியினர் ஏதோவொரு விதத்தில் கொல்லப்படுகின்றனர். எனவே, அந்நடவடிக்கையை அவர்கள் விட்டு விலகினால் நல்லது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” அமைச்சு பதவியை பொறுப்பேற்ற நாளில் இருந்தே எனக்கு பல சவால்கள் இருந்தன. பதவியேற்ற காலப்பகுதியில் கொழும்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பெயர்களில் கிராமங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரவில்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன.

தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து இயல்பு நிலையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி எனக்கு கூறினார். அதற்காக அவர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார். இதன்படி கோட்டா கோ கம உள்ளிட்ட கிராமங்கள் முதலில் அகற்றப்பட்டன. இவ்வாறுதான் கட்டம் கட்டமாக இயல்பு நிலை ஏற்பட்டது. கடந்த ஜுலை மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை சாதகமாக உள்ளது.

அறகலய காலப்பகுதியால்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக அறகலய காலத்தில் பேரணிகள், போராட்டக்காரர்கள் விவகாரம் தொடர்பிலேயே பொலிஸார் செயற்பட்டனர். அப்பிரச்சினைகள் குறித்த கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருள், பாதாளக்குழு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவதானம் செலுத்த பொலிஸாருக்கு நேரம் இருக்கவில்லை.

இந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் போதைப்பொருட்கள் அதிகரித்தன. பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்தன.

அதேவேளை பாதாள கோஷ்டி உறுப்பினர் ஒன்று தமது போட்டியாளரால் கொல்லப்படுகின்றனர். இல்லையேல் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகின்றனர். எனவே, அந்நடவடிக்கையில் இருந்து விலகி இருப்பது நல்லது.” – என்றார்.

Related Articles

Latest Articles