” கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் விரைவில் சாதகமான முடிவொன்றை எடுக்கும் என நம்புகின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலை உருவானபோது, தேர்தலும் நெருங்கியதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக அக்கறை காட்டியது. நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் தேர்தலின் பின்னர் இரண்டாவது அலை உருவானபோது முன்பிருந்த அக்கறை இல்லை. 2ஆவது அலையால் வைரஸ் தொற்று மட்டுமல்ல சமூக,பொருளாதாரம் மற்றும் இதர பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. இதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை.
இந்த அரசாங்கம் தற்போது கலக்கமடைந்துள்ளது. இதனால்தான் மயானத்துக்கு முன்னால் உள்ள இரும்பு கம்பி வேலியில் வெள்ளை துணியை கட்டி அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக்கூட ஒடுக்குவதற்கு முற்பட்டது. துணிகள் கழற்றி எறியப்பட்டுள்ளதுடன், சிவில் உடையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் அறவழியிலான போராட்டங்களுக்குகூட இந்த அரசு அஞ்சுகின்றது என்பது புலனாகின்றது.
முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவுக்கு அனுப்பும் முயற்சியை முன்னெடுத்து, தாம் செய்வது தவறுதான் என்பதனை அரசாங்கமே இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி தர மறுப்பது – மறுத்தது வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு விரைவில் உரிய தீர்வை எதிர்ப்பார்க்கின்றோம். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – என்றார்.










