அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கு இச்சட்டம் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அரசியல் தேவைகளுக்காகவே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேற்படி கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன.
இந்நிலையிலேயே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த முடிவை ஜனாதிபதி மீளப்பெற வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தின. சிவில் அமைப்புகளும் அழுத்தம் கொடுத்தன. எனினும், ஜனாதிபதி மீளப்பெறவில்லை.
நாடாளுமன்றம் நாளை (05) கூடுகின்றது. எனவே, நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் நிராகரித்தால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த முடியாத நிலை ஜனாதிபதிக்கு ஏற்படும்.