வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்க உள்ளது.
ஆகாஷ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ்.
இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கும். இதுபோன்ற ஏவுகணைகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரேசிலும் இந்தியாவும் இருதரப்பு பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட ஏற்கெனவே முடிவெடுத்துள்ளன. அதன் ஒரு கட்டமாக ஆயுதங்களை இணைந்து தயாரிக்க, மேம்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து இருதரப்பு பாதுகாப்புத் துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்தியாவும் பிரேசிலும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட உள்ளன. அதற்கேற்ப பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா வழங்கும். இந்த ஏவுகணைகள் எதிரிகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை வான்வெளியில் 25 கி.மீ. தூரத்திலேயே தாக்கி அழிக்கும்” என்றனர்.