பெருந்தோட்டக் குடியிருப்புக்கள் ஆரம்பித்த காலத்தில் தோட்டப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதைகள், பாடசாலைகள், குடிநீர் வசதிகள் போன்ற சில அடிப்படை வசதிகள் ஏதோ ஓர் அளவுக்கு பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
ஆனால் சில பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட போக்குவரத்து பாதைகள், குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள் போன்றவை எந்த விதமான மறு சீரமைப்புகளும் இன்றி அன்று செய்து கொடுக்கப்பட்டவாறே தற்காலத்திலும் பயன்படுத்தபடுகின்றமை வருத்தத்துக்குரியது.
அந்தவகையில் பதுளை பிரதேச சபைக்குட்பட்ட பலாங்கொடை பிளாண்டேஷன் கம்பனிக்கு கீழ் இயங்கும் தோட்டங்களுக்கு செல்லும் பாலம் பலவருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

வேவெஸ்ஸ தோட்டப் பிரிவு மற்றும் தெபேத்த தோட்டப் பிரிவுக்கு செல்லும் பிரதான நடைபாதையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பாலம் காணப்படுகிறது.
இந்த பாலத்தின் வழியே தான் தெபேத்த பிரிவு, வேவெஸ்ஸ 4ஆம் கட்டைப் பிரிவு, வேவெஸ்ஸ கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது அன்றாட போக்குவரத்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி பதுளை -பசறை பிரதான வீதியின் 4ம்கட்டை தொடக்கம் 7ம் கட்டை வரை ஏதாவது இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பிரதான பாதை மூடப்பட்டால் பதுளை-பசறை பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இந்த வேவெஸ்ஸ காரியாலயப் பிரிவில் காணப்படுகின்ற பாலத்தினையே பயன்படுத்துவர்.
ஆனால் கடந்த மூன்று வருட காலமாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனால் தாம் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.










