ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று டுபாயில் ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வருவதால் அடுத்த ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடத்தப்படும்.










