இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர பொருட்களை திருடி பொலிசாரிடம் வசமாக மாட்டிய நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை மாஜிஸ்திரேட் உத்தால சுவந்துரு கொட நேற்று (19 ) உத்தரவிட்டார்.
ஆடம்பர காட்சியறை ஒன்றில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றினை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததில் ஏற்பட்ட முறுகல் நிலையை விசாரித்த கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கமகே நிலந்த சந்தேக நபரை கைது செய்தார்.
மொறட்டுவையில் உள்ள ஆடம்பர காட்சியறை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற ரூபாய் 29 இலட்சம் பெறுமதியான திருட்டுடன் இச் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சந்தேக நபரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்நபர் திருடி விற்பனை செய்த மடிக்கணினி 14, ஈடெப் – 7, ஸ்மார்ட் மொபைல் – 7 அகண்ட திரை தொலைக்காட்சி 3, ஜெனெரேட்டர் என்பவற்றை மீட்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர் தனிமையில் சென்று காட்சியறைகளின் கூரையை திறந்து உள்ளே சென்று திருட்டை மேற்கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
