“ அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பானதுறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் தற்போது உருவாகியுள்ள போராட்ட அலையானது, மக்களுக்கான நலன்புரி விடயங்களை அடிப்படையாகக்கொண்டது அல்ல. மாறாக அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான துஷ்ட நடவடிக்கையாகும்.
போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஜனநாயக உரிமை அதனை முன்னெடுப்பவர்களுக்கு இருப்பதால் இதுவரை காலமும் பொலிஸார் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடைவிதிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமிருந்து எமக்கு தெளிவானதொரு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதற்கமையவே பொலிஸார்சென்று அன்று போராட்டத்தை நிறுத்தினர். பொலிஸாரின் தேவைக்காக அவர்களை தனிமைப்படுத்தலுக்கு கொண்டுசெல்லவில்லை. பொதுசுகாதார பரிசோதகர்கள் உத்தியோகப்பூர்வமாக முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.” – என்றார்.
