” மக்கள் வீதிக்கு இறங்கி போராடியதால் சூடான் பிரதமர் பதவி விலகினார். இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் வீதியில் இறங்க வேண்டும். அற்கான நடவடிக்கையில்இறங்குவதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம். மக்களை வதைக்கும் ஆட்சியை விரட்டியடிப்பது ஜனநாயக விரோதச்செயலாக அமையாது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்க அறைகூவல் விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்நாட்டிலுள்ள பிரதான இருக்கட்சிகள் எனக்கூறிக்கொள்ளும் தரப்புகளுடன் இணைந்து முன்னோக்கி பயணிக்க முடியுமா? முடியாது. மக்களுக்காக மக்கள் ஆட்சி மலர வேண்டும். அதற்காகவே நாம் உங்களை நாடி ஊருக்கே வந்துள்ளோம். மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்தக்கூடிய ஆட்சியொன்றை அமைக்காமல் எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது.
எப்படி புதிய ஆட்சி அமைப்பது என மக்கள் கேட்கலாம். அதிகாரம் யாரிடம் இருக்கின்றது? உண்மையாலுமே ஆட்சியமைப்பதற்கான ‘அதிகாரம்’ மக்களிடமே இருக்கின்றது. அந்த அதிகாரத்தைதான் ‘புள்ளடி’ மூலம் 5 ஆண்டுகளுக்கு மக்களே தற்காலிகமாக கைமாற்றுகின்றனர். அதனால்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
தேர்தல் வருகின்றது.
ஆக அதிகாரம் என்பது மக்கள் வசம்தான் உள்ளது. தற்போது என்ன செய்ய வேண்டும்? சரியான தரப்புக்கு அந்த அதிகாரத்தை ஐந்து வருடங்களுக்கு கைமாற்றுங்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு அதிகாரத்தை ஒருதரப்புக்கு கைமாற்றிவிட்டீர்கள். ஆனால் மாற்றுவழியும் இருக்கின்றது.
மக்கள் வீதிக்கு இறங்கி போராடியதால் சூடான பிரதமர் பதவி விலகி சென்றுவிட்டார். ஐந்தாண்டுகளுக்குதான் அவரும் பதவிக்கு வந்திருப்பார். ஆனால் மக்கள் வீதிக்கு இறங்கியதால் முன்கூட்டியே செல்ல வேண்டி ஏற்பட்டது.
இங்குள்ளவர்களையும் முன்கூட்டியே அனுப்ப வேண்டுமென்றால் மக்கள் வீதிக்கு வரவேண்டும். மக்கள் தயாரென்றால், நாமும் தயார். அவ்வாறுதான் நடக்க வேண்டும். அது ஜனநாயக விரோதச் செயலகவும் அமையாது.
மக்களால் உருவாக்கப்படும் அரசு, மக்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றதெனில், மக்களின் உரிமைகளை மறுக்கின்றதெனில், மக்களுக்கு எந்நேரமும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றதெனில் , பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றதெனில், நாட்டு வளங்களை விறகின்றதெனில், அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ” – என்றார்.










