மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதற்காக சம்பள நிர்ணய நாளை மறுதினம் 8 ஆம் திகதி கூடவுள்ளது.
முன்னதாக இன்று 6 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சில ஆவணங்களை தயாரிப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் அவகாசம் கோரியுள்ளதாலேயே, கலந்துரையாடல் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டது.
கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாததால், சம்பளத்தை கையாளும் பொறுப்பு சம்பள நிர்ணய சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரச தரப்பிலிருந்து 19 பேர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேவேளை, தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேற்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
