இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச அமைதித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
மேற்படி திட்டத்தை ஆதரித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
” போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசாவிற்கு உதவி வழங்குதல் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆஸ்திரேலியா ஆதரவளித்துவருகின்றது.
காசாவின் எதிர்கால நிர்வாகத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கையும் மறுப்பதற்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்துகின்றது.
மேலும் இந்தத் திட்டத்திற்கு உடன்படுமாறும், ஆயுதங்களைக் களையுமாறும், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுகின்றோம். – எனவும் அல்பானீஸி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” பாலஸ்தீன ஆணையம் காசாவை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுப்பதையும் நாங்கள் பாராட்டுகிறோம். பாலஸ்தீனியர்களை இணைப்பது மற்றும் கட்டாயமாக இடம்பெயர்வதை ஜனாதிபதி டிரம்பின் திட்டம் தெளிவாக நிராகரிப்பதை பிரதிபலிக்கிறது.” – எனவும் அல்பானீஸி சுட்டிக்காட்டியுள்ளார்.