ஆர்.சி.பி. அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் சந்தைப் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
அத்துடன், வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் ஊழியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தான் ஆர்சிபி அணியின் வெற்றி விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்ஏ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளரை இன்னும் பொலிஸார் கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் தலைமறைவாக இருக்கின்றனர்.
கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.