‘ஆறுமுகன் தொண்டமானின் கனவு நிறைவேறிவிட்டது’- இ.தொ.கா.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாட் சம்பளம் மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேயிலை, இறப்பர் வளர்த்தல் உற்பத்தி செய்தல் மற்றும் கைத்தொழில் சம்பந்தப்பட்ட சம்பள நிர்ணயசபைகளின் தீர்வுகளை உத்தியோகபூர்வமாக கடந்த 5ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இதன் படி ஆகக்குறைந்த சம்பளம் 900 ரூபா வாழ்க்கைச் செலவு நிவாரண கொடுப்பனவாக 100 பாவாகவும் மொத்தம் 1000  ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும் என இ.தொ.கா. உப தலைவரும் சம்பள நிர்ணயசபையின் அங்கத்தவரும் சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

” தோட்ட தொழிலாளர்களின் இச் சம்பள உயர்வுக்காக இ.தொ.கா. பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தமையே இதற்கு முழுமையான காரணமாகும்.

அவரது தீர்க்கதரிசனமிக்க காய்நகர்த்தல் மூலம் அரசாங்கத்தின் அனுசரனையை முழுமையாக பெற முடிந்தது. அவரது ஆளுமைக்கு கிடைத்த பெறுவெற்றியாகும். தக்கத்தருணத்தில் சாதுரியமாக செயற்பட்டதன் மூலம் தொழிலாளர் சம்பள பிரச்சினையை சம்பள நிர்ணய சபையிடம் கையளிக்க முடிந்தது. இதன் நிமித்தமே இந்த ஆயிரம் ரூபா சம்பள நிர்ணயம் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை இதன் மூலம் நனவாக்கியுள்ளார் ஜீவன் தொண்டமான். இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள் என சட்டத்தரணி கா. மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles