ஆளுமைக்க குழுமிய முதல்வர், ஊடக சுதந்திரர், தொழிலதிபர், வர்த்தகர், கடுமையான உழைப்பாளர், அதிகார அமைப்பை அசைப்பதில் ஆர்வலர், துணிச்சல்காரர், நல்ல நண்பர், அருமையான மனிதர், நகைச்சுவை உணர்வாளர் என்ற கிளி பறந்து போய் விட்டது.
இலங்கையில் தமிழ் இலத்திரனியல் ஊடகத்துறையில் சகோதர சிங்கள மொழிக்கும், எம் தாய்மொழி தமிழுக்கும் சம அந்தஸ்தை நடைமுறையில் பெற்று தந்த நம்மவர், அமரர் ராஜா மகேந்திரன் மறைவால் நாம் திடுக்கிட்டு நிற்கிறோம். அவரது இந்த நீண்ட நெடிய சாதனை பட்டியலை ஈடு செய்ய என்ன செய்ய போகிறோம் என கலங்குகிறோம்.
தந்தையை இழந்து தவிக்கும் இளவல் சசி மகாராஜாவுக்கும், குடும்பத்தலைவனை இழந்து நிற்கும் திருமதி. மகேந்திரனுக்கும், அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கும், முதல்வரை இழந்துவிட்ட கெபிடல் மகராஜா குழுமத்துக்கும், வழிகாட்டியை இழந்து விட்ட சக்தி, சிரச அலைவரிசைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு அமரர் ராஜா மகேந்திரன் மறைவு தொடர்பில் , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.