கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமத நிலை குறித்து ஆஸ்திரேலிய தேரரான வணக்கத்துக்குரிய Ajahn Brahmawanso விடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
” எமது விமான நிலையத்தில் இடம்பெற்ற அந்த சம்பவத்துக்காக தேரரிடம் மன்னிப்பு கோருகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.
வணக்கத்துக்குரிய Ajahn Brahmawanso தேரர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊடாக பேங்கொக் செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இரவு 10 மணிக்கு அடைந்து அங்கு முக்கிய பிரமுகர் செல்லும் பகுதியில் காத்திருந்துள்ளார்.
எனினும், அவருக்கு விமானத்தை தவறவிட வேண்டியேற்பட்டது. இதனால் 10 மணிநேர தாமதத்துக்கு பின்னரே அவருக்கு புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரதமர் உள்ளிட்ட பிரபுக்கள் சிலர் வெளிநாடு செல்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலேயே இந்நிலை ஏற்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிரணி இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
” பிரபுக்கள் பாதுகாப்பால் தாமதம் ஏற்படவில்லை. விஐபி முனையத்துக்கு ஆயுதம் சகிதம் அதிரடிப்படையினர் செல்ல முடியாது. அவர்கள் வெளியில்தான் இருந்துள்ளனர். குறித்த தேரர் முன்கூட்டியே அங்கு வந்துள்ளார். அதிகாரிகளின் தவறால்தான் அப்படி நடந்துள்ளது.” – என்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா,
” எமது விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால் தேரரிடம் மன்னிப்பு கோருகின்றோம். இந்த சம்பவம் தொடர்பில் விமான சேவைகள் அதிகார சபையால் விசாரணை நடத்தப்படுகின்றது. பிரதமர் வேறு ஒரு முனையம் ஊடாகவே சென்றார். அவர் அந்த பக்கம் வரவில்லை. ” – என்றார்.
