இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்துக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி சூழ்நிலை தொடர்பாகவும் தொழிற்றுறை களின் பாதிப்பு தொடர்பாகவும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷோயா யோஷிடா தலைமையில் நிகழ்நிலை வாயிலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையக அதிகாரிகள், ஆசிய பசுபிக் நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பேசிய ஜீவன் தொண்டமான்,
அண்மையில் அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவை எவ்வாறு மக்கள் போராட்டத்தை திசை திருப்பின என்பது குறித்தும் மேலும் அவசரகாலச் சட்டம், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரால் முப்படைகளுக் கும் வழங்கப்பட்ட அதிகாரம் என்பவற்றை வன்மையாக கண்டிக்கிறேன்.
வரலாற்று ரீதியில் இன, மத, மொழி பாகுபாட்டின் காரணமாக நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளோம்.
என்றுமில்லாதவாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன மக்களை சிரமத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
இந்நிலையில் அமையவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கம் வகிப்பது தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக எமது முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்,
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ரீதியில் உதவக்கூடிய நிதி நிறுவனங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினுடைய வழிகாட்டுதலின்படி நாம் ஆலோசனைகளை வழங்க முடியும். எமது சம்மேளனம் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. இதன் விளைவாக இரு நாட்டு மற்றும் பல நாட்டு கொள்கைகளில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு முக்கியமானதாக உள்ளது.
மேலும் இலங்கையிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்கி தொழிலாளர்கள் சார்பாகவும் தொழிற்சங் கங்கள் சார்பாகவும் இ.தொ.கா. வின் வழிகாட்டலுக்கு அமைவாக நாம் ஆலோசனைகளை வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.