சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு போராட்டம் நடத்துவது நல்ல விடயம். இது பற்றி எம்முடனும் கலந்துரையாடி இருந்தால் பேராதரவை வழங்கி இருக்க முடியும் – என்று ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதொகாவால் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 1700 ரூபா சம்பளம் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் இன்றைய தினம் நடாத்தவிருக்கும் போராட்டத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை, இது ஒரு நல்ல விடயம் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும்இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்னுடனோ என்னுடைய தொழிற்சங்கங்களுடனோ இது பற்றி கலந்துரையாடவில்லை.
இது பற்றி என்னுடன் கலந்துரையாடி இருந்தால் அதற்கு ஆதரவு வழங்கி இருக்க முடியும்.” – என்றார்.
ராமு தனராஜா










