அரசை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் உரிமை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கிறது. அதற்கு மதிப்பளிக்கிறோம். அதுவே ஜனநாயகத்தின் வெளிப்பாடு. எனினும், மதச் சின்னங்களை அவமானப்படுத்தாது எதிர்ப்புகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்தில், அரசை விமர்சிப்பதற்காக “நந்தி ஒழிக” எனும் பதாகையை வெளிப்படுத்தி, இந்துக்களின் புனித அடையாளத்தை அழிக்குமாறு கூறுவதானது இந்துக்களுக்கெதிரான நடவடிக்கையாகவும், அவமதிப்பாகவுமே கருதுகின்றோம்.
நந்தி (காளை) என்பவர், இந்துக்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். சைவ புராணங்கள் படி, இவர் நாத சைவத்தின் எட்டு சீடர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஐவகை நந்திகளின் சிலைகள் அமைந்திருக்கும். அதன் அடிப்படையில் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும் கருதப்படுகிறது. அதேவேளை நந்திக்கொடி ஆனது யாழ்ப்பாண இராச்சியத்தின் சின்னமாகவும் காணப்பட்டது எனவே அது தமிழர்களின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
அவ்வாறு புனிதத்துவம் வாய்ந்த நந்தியை ஒழிக எனும் பதாகையை பாராளுமன்றத்தில் ஏந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிடம், தமிழ் சமூகத்திடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும் தமிழ் மொழியறிந்த முஸ்லிம் உறுப்பினர் மதங்களுக்கிடையில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள கற்றுக் கொண்டால் சிறப்பாக அமையும் என ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.