” ஆங்காங்கே கதை சொல்லித் திரிய வேண்டாம், அரசியல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், மேலும் மூன்று வருடங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிடை முன்னெடுத்துச் செல்வார்.” என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஊவா மாகாண சபை அதிகாரிகள் சமய நிகழ்வுகளை நடத்தி, செயல்திறன் மிக்க அரச சேவைக்கான உறுதிமொழி வழங்கி 2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (03) ஊவா மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்:
2021ஆம் ஆண்டில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டுள்ளோம், என்றாலும் பொருளாதார ரீதியில் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம், சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்தது. சுற்றுலா விடுதிகளில் பணிபுரிந்த பல இலட்சம் பேருக்குத் தொழில் இல்லாமல்போனது. இதுபோன்ற பல பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசு முகங்கொடுக்க நேர்ந்தாலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் ஒருநாள் சரி தாமதிக்காமல் வழங்கியது.
அதேபோன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் அரசாங்கம் பிரதேச சபைகளின் ஊடாக உதவிகளை வழங்கியது. பாடசாலைகள் மூடப்பட்டன, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இவை அனைத்துக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தொடராக முன்னெடுத்து.
ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் ஊவா மாகாணத்தில் உங்களால் முன்னெடுக்கப்படும் அரச சேவையை நாம் மிகவும் மதிக்கின்றோம். திறமையான, வேலை செய்ய விருப்பமான அரச ஊழியர்கள் எம்முடன் இணைந்திருப்பது எமக்கு பெரும் சக்தியாகவும், சந்தோசமாகவும் உள்ளது. பொதுமக்கள் வழங்கும் வரியிலிருந்து நாம் சம்பளம் பெறுகிறோம், அதற்கு நாம் நேர்மையானவர்களாக நாம் இருக்கவேண்டும். அரச ஊழியர்கள் என்ற வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு எமது அயராத ஒத்துழைப்பை வழங்க இந்த வருடமும் நாம் திடசங்கற்பம் பூணுவோம்.
அலுவலக நேரங்களில் ஆங்காங்கே கதை சொல்லித் திரிய வேண்டாம், அரசியல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், மேலும் மூன்று வருடங்களுக்கு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வார். எமக்கு எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும், எமது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை வைக்கமுடியும்.
அந்நிய செலாவணி குறித்து எமக்குப் பிரச்சினைகள் காணப்படுகிறது, டொலர் பற்றாக்குறை காணப்படுகிறது, அவை அனைத்தையும் பரிபூரணப்படுத்திகொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.உங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றுங்கள், நீங்கள் எடுக்கும் சம்பளத்திற்கு நேர்மையான சேவையை நான் எதிர்பார்க்கின்றேன். உதயமாகிய 2022 புதுவருடம் உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த, எதிர்பார்ப்புகள் வெற்றிபெறுகின்ற இனிய புதுவருடமாக அமைய எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜ்










