நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து, அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால், தேர்தலொன்று வரும்பட்சத்தில் அரச கூட்டணி இரண்டாக பிளவுபடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய தேசிய வேலைத்திட்டமொன்றை 11 அரச பங்காளிக்கட்சிகள் கொழும்பில் நேற்று முன்தினம் வெளியிட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை வெளிப்படையாகவே விமர்சித்து உரையாற்றினர். அவர் அமெரிக்க பிரஜையென்பதையும் நினைவூட்டி தாக்குதல் தொடுத்தனர்.
” தனக்கு தான் எல்லாம் முடியும். மூளை உள்ளது. நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லை என மனோ நிலையில் செயற்படுபவர்களால் சவாலை எதிர்கொள்ள முடியாது. நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கி ஆளுநருக்குகூட நிதி அமைச்சரை சந்திக்க முடியாவிட்டால், அதன் நோக்கம்தான் என்ன” என்பது உட்பட பஸிலை இலக்கு வைத்து அமைச்சர் விமல் சரமாரியாக தாக்குதலை தொடுத்தனர்.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனைய தலைவர்களும் அரசின் செயற்பாடுகளை கடுமையாக சாடினர்.
பங்காளிக்கட்சிகளின் இந்த கூட்டத்தால் மொட்டு கட்சி உறுப்பினர்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் இருந்தே பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தலைமையாகக் கொண்டு புதியதொரு கூட்டணியை அமைக்கவே பங்காளிக்கட்சிகள் முயற்சித்துவருகின்றன. இனிவரும் தேர்தல்களிலும் பங்காளிகள் தனிவழி பயணத்தையே மேற்கொள்ளும்.
