இரத்தினபுரி மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய பாடசாலைகள் தொடர்பில் பிரதேசத்தின் அரசியல் அதிகார சபையினை அறிவுறுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகமவின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 9 பிரிவுகளில் தேசிய பாடசாலைகள் எதுவும் இல்லை. பௌதீக மற்றும் மனிதவளம் உரிய முறையில் அபிவிருத்தி அடைந்துள்ள பாடசாலைகள் இல்லாமையால் அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. கிராமப்பகுதிகளில் கஷ்டங்களுக்கு மத்தியில் மாணவர்கள் கல்விகற்கின்றனர். அவர்களின் தேவைகளுக்காக இந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வது மிக முக்கியமாகும்.
இதுதொடர்பில் பதில் அளித்த சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குறுப்புஆரச்சி தெரிவித்ததாவது,
கல்வி அமைச்சின் மூலம் ஒன்லைன் முறைக்கு தொடர்புப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் தகவல்களை சேகரித்தோம். அதற்கமைய பல பாடசாலைகளில் பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. வலய மட்டத்தில் காவத்தை மத்திய வித்தியாலயம், அயகம ஸ்ரீ ராகுல வித்தியாலயம், எலபாத மகா வித்தியாலயம், குருவிட மத்தியவித்தியாலயம், வெலிகேபொல சித்தார்த்த மகா வித்தியாலயம் உட்பட மேலும் பல பாடசாலைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் தொடர்பாக அரசியல் அதிகார சபையில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி உட்பட நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் மாவட்ட அபிவிருத்தி கமிட்டியின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவள சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வலியுறுத்தினர்.