ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில் ஆஜர்படுத்தாததால் இவ்வழக்கு விசாரணையை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், சந்தேக நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் பிணை மனு சமர்பிக்க முடியுமெனவும் வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச அறிவித்தார்.
சந்தேக நபர் கடந்த 114 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாத நிலையை சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ச்சியாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சந்தேக நபர் “ஸ்கைப்” தொழிநுட்பம் மூலம் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவ்வழக்கு நேற்று(24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மீண்டும் “ஸ்கைப் “தொழிநுட்பட்பம் ஊடாக விசாரணையை முன்னெடுத்த நீதவான் வழக்கை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக தெரிவித்து பெப்ரவரி 07ம் திகதிவரை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இந்த விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டுக்கு வெளியே மதுபோதையில் காணப்பட்ட அதே குடும்பத்தை சேர்ந்த தங்கையா இரவீந்திரன் என்பவர் உயிர் தப்பியிருந்தார்.
மேற்படி தீ சம்பவத்தில் பெற்றோல் பாவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு அதன் அறிக்கை இராகலை பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இராகலை நகரில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தங்கையா இரவீந்திரன் பெற்றோல் பெற்று சென்றதாக இராகலை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவரை பொலிசார் கடந்த வருடம் ஒக்டோபர் (12) ஆம் திகதி கைது செய்து அன்றைய தினம் மாலை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மேலதிக விசாரணைகளை இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படியும் நீதிமன்றில் ஆஜராகியிருந்த இராகலை பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
