இராகலை தோட்ட வைத்தியசாலையை தோட்ட நிர்வாகம் மூடியமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் இராகலை இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் இயங்கிய தோட்ட வைத்தியசாலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தோட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.
இராகலை தோட்ட வைத்தியசாலை ஐந்து தோட்டப்பிரிவுகளுக்கு பொதுவான ஒன்றாக காணப்படுகின்றது.
இராகலை இலக்கம் 01,02,சென்லெணாட்ஸ்,டி.சி.தோட்ட பிரிவு, ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன் கருத்திற் கொண்டு ஆரம்ப காலம் முதல் இந்த வைத்தியசாலை இயங்கி வந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகள் பொறுப்பேற்ற பின்னர் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வைத்தியசாலைக்கு தேவையான மருந்து வகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி தோட்ட வைத்தியசாலையில் நீண்டகாலமாக வைத்தியர் ஒருவர் கடமையாற்றிவருகின்றார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தோட்ட வைத்தியர் (ஈ.எம்.ஏ) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திடீரென கெட்டபுலா பிரதேச தோட்டத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார்.
இதனையடுத்தே இந்த தோட்ட வைத்தியசாலை மூடப்பட்டது.
வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை தோட்ட நிர்வாகம் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக கடந்த சில காலமாக முறையாக பெற்று தராமையால் தோட்ட வைத்தியருக்கு கிடைக்கும் சம்பள பணத்தில் தேவையான மருந்துகளை பெற்று தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கிவந்தார்.
இதனால் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்த வைத்தியர் தோட்ட நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட விரக்தியினால் வேறு தோட்டத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
