செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட் பட்ட மாந்தீவு தொழுநோய் வைத்திய சாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்களுக்காக மாந்தீவிலேயே விசேட வாக்களிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
தற்சமயம் அந்த இரண்டு நோயாளர்களும் மாந்தீவு வைத்தியசாலையில் இல்லாதமையினால் இத் தேர்தலில் அவர்கள் இருவரும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மண்டப இல – 3 இல் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்கள் இருவருக்குமாக விசேடமாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் பட்சத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம் எனவும் பொதுவான வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படவுள்ளது எனவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம். பீ.எம்.சுபியான் ஊடகங்களுக்கு கருக்கு தெரிவிக்கையில் கூறினார்.
