ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சை புரட்டியெடுத்த மும்பை அணி இறுதிப்போட்டியை எட்டியது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் மும்பையை துடுபெடுத்துமாறு பணித்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் இன்னிங்சை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கினர்.
2-வது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா (0) துல்லியமான எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ரன்ரேட்டை எகிற வைத்தனர். அக்ஷர் பட்டேல், அஸ்வின் ஓவர்களில் சிக்சர் பறந்தன.
பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்கள் திரட்டியது. இந்த சீசனில் பவர்-பிளேயில் மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்கோர் 78 ரன்களாக உயர்ந்த போது குயின்டான் டி காக் 40 ரன்களில் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
சிறிது நேரத்தில் நடப்பு தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட் (0) அஸ்வின் சுழலில் சிக்கினார். அப்போது மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 101 ரன்களுடன் (12.2 ஓவர்) லேசான தடுமாற்றம் கண்டது. இந்த சூழலில் இஷான் கிஷனும், குருணல் பாண்ட்யாவும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். இருப்பினும் ஓரிரு ஓவர்களில் ரன்வேட்டை தளர்ந்தது. குருணல் பாண்ட்யா 13 ரன்னில் நடையை கட்டினார்.
இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் ‘சரவெடி’யாய் வெடித்தனர். ரபடா, நோர்டியாவின் ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா தலா 2 சிக்சர்களை தெறிக்க விட்டு பிரமாதப்படுத்தினார். இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்சரோடு 200 ரன்களை தொட வைத்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 55 ரன்களுடனும் (30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 37 ரன்களுடனும் (14 பந்து, 5 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேகரித்தனர். டெல்லி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விக்கெட் ஏதும் எடுக்காத காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 44 ரன்களை வாரி வழங்கினார்.
பின்னர் 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ‘செக் ’ வைத்தார். அவரது ஓவரில் பிரித்வி ஷா (0), அடுத்து வந்த ரஹானே (0) வீழ்ந்தனர். இதன் பின்னர் ஷிகர் தவான் (0), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (12ரன்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காலி செய்ய டெல்லி அணியின் பேட்டிங் முதுகெலும்பு சிதைந்தது.
20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய டெல்லி அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்ஷர் பட்டேல் (42 ரன்) அணி 100 ரன்களை கடக்க உதவினர்.
20 ஓவர்களில் டெல்லி அணியால் 8 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நாளை மறுதினம் மோதும்.