இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை, திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.

ட்ரம்பின் “அமெரிக்காவுக்கு முதலிடம் ” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் வகையில், அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை பரந்தளவில் மீளமைக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இதற்கமைய, குறைந்தது 29 நாடுகளில் உள்ள தூதுவர்களின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என்று இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பி அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டனர் என்று, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அரசியல் நியமனங்கள் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை வெளியேறுமாறு முறைப்படியான அறிவிப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.

திரும்ப அழைக்கப்பட்டவர்கள் தங்கள் வெளிநாட்டு சேவை அந்தஸ்தை இழக்க மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக வேறு நியமனங்களுக்காக வொஷிங்டனுக்குத் திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பி அழைக்கப்படும் இராஜதந்திரிகளின் சரியான எண்ணிக்கை அல்லது அடையாளங்களை உறுதிப்படுத்த இராஜாங்கத் திணைக்களம் மறுத்துவிட்டது.ஆனால் இந்த நடவடிக்கையை ஒரு வழக்கமான செயல்முறை என்று விவரித்துள்ளது.

ஆபிரிக்காவில் இருந்து அதிகளவாக, நைஜீரியா, ருவாண்டா, செனகல் மற்றும் உகண்டா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், பிஜி, லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவில், ஆர்மேனியா, வடக்கு மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கான தூதுவர்களும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் அல்ஜீரியா மற்றும் எகிப்தில் இருந்தும், தெற்காசியாவில், நேபாளம் மற்றும் சிறிலங்காவில் இருந்தும், மேற்கு அரைக்கோளத்தில் குவாட்டமாலா மற்றும் சுரினாமில் இருந்தும் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles