பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
மின்னேரிய வோல்டா ஆட்டோ டெக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தேவைப்படுகின்ற நிலையில், வோல்டா ஆட்டோ டெக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் இன்று முதல் அசெம்பிள் செய்யப்பட்ட உழவு இயந்திரங்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய வசதி செய்துள்ளது.
தற்போது, வோல்டா ஆட்டோ டெக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் இந்தியாவுடன் கூட்டு உற்பத்தி கூட்டாண்மையை நிறுவியுள்ளது, மேலும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தொழிற்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, துவிச்சக்கர வண்டிகள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை இணைப்பதற்கான செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
வோல்டா ஆட்டோ டெக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திறமைகளைக் காண வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியை ஆதரிப்பதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பசுமை பொருளாதாரத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இப்போது உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றன. இலங்கை என்ற வகையில் நாமும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதன் மூலம் இலங்கைக்கு பல அனுகூலங்களை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவ்விஷயத்தில், தனித்து நிற்கும் முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் நாட்டுக்குத் தேவை. எனவே, இந்த முயற்சிக்கு திரு.ஜெகத் மகவிதாவை வாழ்த்துகிறேன்” என்றார்.
