அரசு, பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி அவற்றை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கும் வேலைத் திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இம்முறை பெரும் போகத்தில் அரசு 61,300 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்ய நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா பத்து கிலோ அரிசி இரண்டு மாதங்களுக்கு இலவசமாக 20 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதும் பின்னர் குடும்பங்களின் எண்ணிக்கை 29 லட்சமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
