ரி – 20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.
அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள்.
தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய போட்டிக்கு மழை ஆபத்து இல்லை. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.










