இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முழு ஆதரவு: மாலைதீவு ஜனாதிபதி உறுதி
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமைக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பவும் இயன்றளவு தனது ஆதரவை வழங்குவதாக மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் மாலைதீவு அரசாங்கமும் மக்களும் கைகோர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
தனது சகோதர நாடான இலங்கை, ஒருபோதும் கைவிடப்படாது என்றும் கலாநிதி முகமது முய்சு மேலும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் மாலைதீவு, இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சந்தர்ப்பத்திலும், மாலைதீவு அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் மனமார்ந்த ஆதரவு பாரிய பலமாகும் என்று தெரிவித்தார்.










