இலங்கை – அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை-அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அலுவலக அதிகாரிகளைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவுசெய்யப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள மற்றும் வேலு குமார் ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா பொருளாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நட்புறவுச் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய சபாநாயகர், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பல தசாப்த கால இருதரப்பு உறவுகள் இந்த சங்கத்தின் ஊடாக மேலும் வலுவடையும் என்றார்.
மேலும், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்
சங்கத்தில் உரையாற்றிய தூதுவர் சுங், புதிய அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்த நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்றப் பரிமாற்றங்களும் பரஸ்பர ஒத்துழைப்பும் வலுவடையும் என்றார்.
