இலங்கை சீனாவின் செல்லப்பிராணியா, இந்தியாவின் செல்லப்பிள்ளையா?

” சீனாவின் செல்லப் பிராணியாக இருப்பதை விடுத்து இந்தியாவின் செல்லப் பிள்ளையாக அயல்நாட்டின் நட்புறவைப் பேணிப்பாதுகாப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் நடைமுறையில் உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சட்டம் இருப்பதையே காணமுடிகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் 5,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களுக்கு அது கிடைக்கவில்லை. தெற்கில் ஒரு சட்டம் மலையகத்தில் ஒரு சட்டம் என செயற்படுத்தப்படுகிறது.

மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சில சக்திகளால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன . கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுகளை வைப்பதும் அக்கரப்பத்தனை பகுதியில் மூன்று தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட முடியும். அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

பால் மாவுக்கு தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு என்ற நிலை தொடரும்போது மக்கள் தொழிலுக்குச் செல்வதா வரிசையில் நின்று அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதா என்ற நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இரண்டு, மூன்று தினங்களுக்கே எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்பின் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?” – என்றார்.

Related Articles

Latest Articles