இலங்கை தோட்ட சேவையாளர் சங்க தலைமைப்பதவிக்கு மலையகத்தை சேர்ந்த மனோகரன் போட்டியிடுகின்றார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 24 வது பேராளர் மாநாடு நநாளை (21.05.2022) கொழும்பில் நடைபெறுகின்றது.
இந்த பேராளர் மாநாட்டில் தலைமைப்பதவிக்கு சங்கத்தின் முன்னாள் உப தலைவர் பொகவந்தலாவையை சேர்ந்த செல்லதுரை மனோகரன் போட்டியிடுகின்றார்.
இவர் 1997 ஆம் ஆண்டு முதல் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். அன்று முதல் சங்கத்தின் பல பதவிகளையும் வகித்து சங்கத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றியுள்ளார்.
பிரதித் தலைவர் பதவிக்கு காலி மாவட்டத்தை சேர்ந்த அஜித் சிறிமானவும் பொருலாளர் பதவிக்கு துசார சரத்குமாரவும் இரண்டு உப தலைவர் பதவிக்காக பதுளையை சேர்ந்த ஜெகநாதனும் தலவாக்கலையை சேர்ந்த எஸ்.பத்மநாதனும் போட்டியிடுகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த செல்லதுரை மனோகரன், எங்களுடைய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமானது இலங்கையில் இருக்கின்ற மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்று. இந்த சங்கத்தில் பெருந்தோட்ட துறையில் தொழில்புரிகின்ற தோட்ட சேவையாளர்களே அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.
எங்களுடைய சங்கத்திற்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலமே எங்களுடைய அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றது. அந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்ததைகளில் கடந்த காலங்களில் கலந்து கொண்டு எங்களுடைய உறுப்பினர்களுக்காக குரல கொடுத்து பல விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.
தற்பொழுது எமது சங்கத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. தனிமனித ஆதிக்கமும் சர்வதிகார போக்குமே சங்கத்தை நிர்வகித்து வருகின்றது. எனவே இதனை முறையடித்து ஜனநாயக நடைமுறைகளை கொண்டு வருவதற்காக அனைத்து அங்கத்தரவர்களுடைய ஆதரவுடனும் இம்முறை எனது தலைமையிலான குழுவினர் களம் இறங்கியிருக்கின்றோம்.
எனவே இந்த பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக முறையிலான நிர்வாகத்தை முன்னெடுத்து எங்களுடைய உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்னும்; பல உரிமைகளை பெற்றுக் கொடுக்க எங்களுடைய குழுவினர் முழு மூச்சுடன் செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் எப்பொழுதும் ஏனையவர்களுக்கு விட்டுக் கொடுத்து சங்கத்தில் உப தலைவர்களாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றோம். எங்களுக்கு தலைவர்களாக வர முடியும்.அந்த திறமையும் அனுபவமும் எங்களிடம் இருக்கின்றது.எனவே இதனை கருத்தில் கொண்டே எங்களுடைய குழுவினர் இந்த பேராளர் மாநாட்டில் ஒரு குழவாக போட்டியிடுகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.










