பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் 5 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாயாகவும், வரவு – செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாயாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபா வழங்கப்படவுள்ளது.
ஆனாலும் வேலை நாட்கள் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும். ஆனால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக கம்பனிகள் அறிவித்துள்ளன. சம்பளம் வழங்கக்கூடிய அளவுக்கே வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளன.
மாதம் 13 அல்லது 15 நாட்கள் வேலை வழங்குவதே கம்பனிகளின் திட்டமாக உள்ளது. அவ்வாறு நடைபெற்றால் அது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஏற்கனவே பெற்ற சம்பளத்தைவிடவும் குறைந்தளவான தொகையையே பெறவேண்டிவரும்.
எனினும், விசேட சட்டத்தை தொழில் அமைச்சு இயற்றும் பட்சத்திலோ அல்லது புதியதொரு உடன்படிக்கை கைச்சாத்திடும்பட்சத்திலோ தொழில் சலுகைகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
