காசாவில் நேற்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.
அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர், அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக புதன்கிழமை அன்று மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு டிரம்ப் உடைய 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதில் ஹமாஸ் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். பதிலுக்கு, இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்து, காசாவில் ஒரு அமைதி காக்கும் படை அவர்களை மாற்றிய பிறகு படிப்படியாக தனது படைகளை வாபஸ் பெறும்.
இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் கலந்தாலோசித்து வரும் நிலையில் நேற்றைய தாக்குதல் பின்னடைவாக அமைந்துள்ளது.