காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும் தீவிரப்படுத்துமே தவிர, குறைக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது.
இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது. எனவே, என்ன செய்யவது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள்.
காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.
இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து செப்.19ம் தேதி இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லா மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை தொடங்கியுள்ளது. வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 50 பேர் என மொத்தமாக 569 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா தளபதி தளபதி இப்ராஹிம் முகமது கோபிசி’ கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவும் தளபதியின் மரணத்தை உறுதி செய்திருக்கிறது.