ஆஸ்திரேலியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர போர் வெடித்துள்ள நிலையில், தமது நாட்டு பிரஜைகளை அங்கு செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என உளவு பிரிவு கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து ஈரானுடனான இராஜதந்திர உறவை துண்டிக்கும் முடிவை ஆஸ்திரேலியா எடுத்தது.
தமது நாட்டிலுள்ள ஈரான் தூதுவரை வெளியேற்றும் தீர்மானத்தையும் எடுத்தது. இதற்காக தூதுவருக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய ஆஸ்திரேலியாவில் இருந்து ஈரான் தூதுவர் நேற்று வெளியேறினார்.
இவ்வாறு வெளியேறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் அடிப்படையற்றவை எனக் கூறி நிராகரித்தார்.
ஆஸ்திரேலியர்களுக்கு ஈரான் பாதுகாப்பான நாடு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியர்களை ஈரான் செல்ல வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவால் இஸ்ரேல் கடுப்பில் உள்ளது. எனவே, இஸ்ரேலை சமரசப்படுத்துவதற்காகவே ஈரானை ஆஸ்திரேலியா பழிதீர்த்துள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பிரதமர் நிராகரித்தார்.