ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில்,

‘லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்ச்சியாக ஈரான் தொடர்பில் இருந்து வந்தது. இந்தநிலையில், தெற்கு லெபனானில் வெள்ளிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்திருந்தது.

நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல், ஹெர்சி ஹாலேவி, “இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களை அச்சுறுத்தும் யாரையும் நாங்கள் சென்றடைவோம். இது முடிவு அல்ல. இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் யாருக்கும் இது ஓர் எளிமையான செய்தி. அவர்களை எப்படி அடைவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.

நஸ்ரல்லா கொலை – உறுதி செய்த ஹிஸ்புல்லா: இதனிடையே, லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தங்களது தலைவரும், அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நஸ்ரல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்து கொண்டார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும் என ஹிஸ்புல்லாக்கள் உறுதி எடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹசன் நஸ்ரல்லா வழிநடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் இரங்கல்: இதனிடையே, ஹில்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஹசன் நஸ்ரல்லாவின் பாதை தொடரும் – ஈரான்: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டாலும் அவரது பாதை தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சித் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் புனிதப் பாதை தொடரும். இறைவன் விரும்பினால் குத்ஸின் (ஜெருசலேம்) விடுதலையில் அவரின் இலக்கு நனவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் உயிரிழப்பு நிலவரம் என்ன? – காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் 92 பேர் உயிரிழந்தனர், 153 பேர் காயம் அடைந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலில், லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles