” பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில் பெருந்தோட்ட மக்களின் எழுச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்தான் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சௌமியமூர்த்தி தொண்டமானும், ஆறுமுகன் தொண்டமானும் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இங்கு கூறப்பட்டது.அது உண்மை அல்ல, ஈழத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். பல மலையக இளைஞர்கள் போராட்டத்தில் மாவீரர்களாக மடிந்துள்ளனர்.
கிளிநொச்சிக்கு வருகைதந்திருந்த ஆறுமுகன் தொண்டமான், பிரபாகரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதேபோல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உதயமானபோது சௌமியமூர்த்தி தொண்டமான் அதன் இணைத் தலைவராக செயற்பட்டார். எனவே, ஈழ விடுதலையில் அவர்கள் ஒருபோதும் எதிர்க்கருத்தை கொண்டிருக்கவில்லை. மலையக மக்களும் எதிர்கருத்தைக்கொண்டிருக்கவில்லை. எனவே, ஈழத் தமிழர்களின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.