அன்று ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது சிறப்பாகவே மலர்ந்தது. ஆனால் அன்று 9.50இற்கு வந்த செய்தியை நம்ப முடியவில்லை. ”கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஏதோ வெடித்தது. நான் அங்கதான் இருக்கிறேன். ஆனால் உள்ள போக முடியவில்லை. நிறைய பேர் விழுந்து கிடக்கிறாங்க. குண்டு வெடிப்பினு தான் சொல்லுறாங்க.” என்ற நண்பர் ஒருவர் அழைத்து சொன்னார்.
கொழும்பின் பிரதான வீதியொன்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த தான், ”ஏதாவது ட்ரான்ஸ்ஃபோமர் வெடிச்சிருக்கும்.” என்று அந்த அழைப்புக்கு பதிலளித்து துடித்துக் கொண்டேன். ஆனால் அடுத்தடுத்து வந்த அழைப்புக்கள் நிலைமை விமரீதமாகியுள்ளதை உணர்ந்து ஊடகப் பணிக்காக களத்திற்கு விரைந்தேன்.
கொழும்பு கொச்சிக்கடை தேவாயலத்தில் ஆரம்பித்த குண்டு வெடிப்பு, கொழும்பு நட்சத்திர விடுதிகள் மூன்றிலும் தாக்குதல் என்ற செய்தி வந்தது. நேரடியாக அங்கு சென்று தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த போது, நீர்கொழும்பு தேவாயலம், மட்டக்களப்பு தேவாலயம் என்று அடுத்தடுத்து செய்திகள் வரத் தொடங்கின.
அம்பியுலன்ஸ் வண்டிகள் வீதிகளில் பறந்தன. புலனாய்வாளர்கள், இராணுவம், பொலிஸ் என பாதுகாப்புத் துறை வீதிகளில் விரைந்தனர். ஊடகத்துறை என்பதால், அடையாள அட்டையுடன் அங்கும் இங்குமாக செய்திகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அன்று மதியம் 2 – 3 மணி வரை அடுத்தடுத்து வந்த செய்திகள் கொலைநடுங்கச் செய்தன. இந்த பதற்றம் சுமார் ஒருவாரத்திற்கு மேலாக தொடர்ந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
ஆனால் அனைத்தும் தலைகீழானது. 300இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த தினத்தை இலங்கையர் மட்டுமல்ல முழு உலக மக்களும் அத்துனை இலகுவில் மறந்துவிட முடியாது.
சுமார் இரண்டு, மூன்று வாரங்கள் வரை இன வன்முறைகளும் பதிவாகின. சில பிரதேசங்களில் கடைகள் தீயிடப்பட்டன. அதன்பின்னர் இலங்கையின் அரசியல், சமூக ரீதியான மாற்றங்களும் இதனை மையப்படுத்தி ஏற்பட்டன.
ஏதோ ஒரு பெயரில் நடத்தப்பட்ட அடி முட்டாள்த்தனமான தாக்குதல்களினால் இலங்கையின் வரலாறு மீண்டும் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இதுபோன்ற முட்டாள்தனமான சிந்தனைகளை ஆதரிப்பதும், அதனை எதிர்க்காதிருப்பதும் இன்னும் மோசமாகவே கருத வேண்டியிருக்கிறது.
இதுகுறித்து பக்கம் பக்கமாக எழுத கசப்பான நினைவுகள் இருக்கினறன. ஆனால் இதற்கு வித்திட்ட சிந்தனைகளை இனிமேலும் ஆதரிக்கக் கூடாது என்பதை பதிவு செய்து சிறுகுறிப்புடன் முடித்துக் கொள்வது போதுமானதாக தோன்றுகிறது.
உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அத்தனைப் பிரார்த்தனை அவர்களுக்காக இருக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகளின் உள், வெளிக் காயங்கள் இலகுவில் மறந்துவிடும் என்று எண்ண முடியாது. அவர்களுக்காக விசேடமாக பிரார்த்திப்போம்.
வீ.ஏ.கே.