உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும் நிலையில் அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்று வரும் சூழலிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கியேவை கைப்பற்றும் முயற்சிக்கு உக்ரைனிய படையிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்தே டொன்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் ரஷ்யத் துருப்புகள் அவதானம் செலுத்தியுள்ளன.

இந்த சூழலில் ரஷ்யத் துருப்புகள் முட்டுக்கட்டையை சந்தித்திருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமெரிக்க செனட் குழு விசாரணையில் கருத்துக் கூறிய தேசிய உளவுத் துறை பணிப்பாளர் அவ்ரில் ஹெய்னஸ் கூறியதாவது, ‘டொன்பாசுக்கு அப்பாலும் செயற்பட புட்டின் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கும் ரஷ்ய இராணுவத்தின் தற்போதைய திறனுக்கும் இடையே முரண்பாடு உள்ளது’ என்றார்.

பண வீக்கம், உணவு பற்றாக்குறைகள் மற்றும் எரிசக்தி விலை மோசமடைதல் உக்ரைனுக்கான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி பலவீனமடைவதற்கு காரணமாக இருக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி கணித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் போர் தொடர்வதால் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான வழிமுறைகளுக்கு திரும்பக் கூடம் என்றும் ரஷ்யாவின் இருப்பு தொடர்பில் புட்டின் அச்சுறுத்தலை உணர்ந்தால் மாத்திரமே ரஷ்யா அணு அயுதத்தை பயன்படுத்தக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே விசாரணையில் கருத்துக் கூறிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவன பணிப்பாளர் ஸ்கொட் பரிர், ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் இழுபறியை சந்தித்திருப்பதாகக் கூறினார்.

புதிய போர் நடவடிக்கைகளில் வட கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் நான்கு குடியிருப்புப் பகுதிகளை மீட்டதாக உக்ரைன கூறியுள்ளது.

போர் ஆரம்பித்தது தொடக்கம் கடும் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி வரும் கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய துருப்புகளை உக்ரைன் வெற்றிகரமாக படிப்படியாக பின்வாங்கச் செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles