உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தினார் எனக் கூறப்படும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை வெளிநாட்டுக்கு உளவு பிரிவொன்று எடுத்துச்சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை யார் எடுத்தது என்பது குறித்து எவரும் கதைப்பதில்லை. இந்த விடயத்தைத்தான் முதலில் கண்டறியவேண்டும். ஏனெனில் குண்டு தாக்குதலை நடத்தியவரின் தொலைபேசியில்தான் சகல விடயங்களும் இருந்திருக்கும்.
இந்நிலையில் அந்த தொலைபேசியின் பிரதான பாகத்தை உளவு பிரிவொன்று, வெளிநாட்டுக்கு எடுத்துசென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதற்கு பொலிஸாரும், நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளதெனில், அந்த பாகத்தை யார் எடுத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்தால், பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கலாம். இதற்கு கட்டளையிட்ட அரசியல்வாதிகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதனைவிடுத்து முன்னாள் ஜனாதிபதியையும், அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மட்டும் விமர்சித்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒடுக்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.” – என்றார்.