உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளிப்படுத்தப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடன் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக ஜனாதிபதிக்கு 7 நாட்கள் காலக்கெடு விதித்துள்ள அவர், இக்காலப்பகுதிக்குள் அறிக்கைகளை வெளிவராவிட்டால் அவற்றை தாம் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் எந்தவொரு அறிக்கையும் காணாமல்போகவில்லை என்பதையும், பக்கங்கள்கூட குறைக்கப்படவில்லை என்பதையும் நாம் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
உயர்நீதிமன்ற நீதியரசர் சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஒரு பகுதி, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. குறித்த பகுதியை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் இந்த பகுதியில்தான் உள்ளன என்று தகவல் பரப்பட்டது. ஆணைக்குழுவால் வெளியிடப்படக்கூடாது என பரிந்துரைக்கப்பட்ட பகுதி, இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கத்தோலிக்க ஆயர்கள் சபைக்கு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
ஓய்வுநிலை நீதியரசர் ஐ.எம். இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை 2024 ஜுன் 25 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுநிலை நீதியரசர் ஏ.என்.ஜே சில்வா தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை 2024 செப்டம்பர் 14 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விரு அறிக்கைகளையும் உடன் வெளியிடுமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம். கத்தோலிக்க சபையும் இதைத்தான் வலியுறுத்துகின்றது.
இவ்விரு அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் அறிக்கையை மூன்றாம் தரப்பொன்று வெளியிடுவது சம்பியதாயப்பூர்வமான நடவடிக்கை அல்ல. அதனால்தான் நாம் அவற்றை வெளியிடாமல் இருக்கின்றோம்.
எனினும், இவ்விரு அறிக்கைகளையும் அடுத்த 7 நாட்களுக்குள் ஜனாதிபதி வெளியிட நடவடிக்கை எடுக்காவிட்டால், அவற்றை நாம் வெளியிடுவோம் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம்.” – என்றார்.










