உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
” எம்மால் முன்னெடுக்கப்படும் விசாரணையை உறுப்பினர் ஏற்கின்றாரா, இல்லையா என்பது எமக்கு பிரச்சினை கிடையாது. ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அவருக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம்.
எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
உரிய விசாரணைகள்மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும். இதற்குரிய தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் 2019 இல் தான் நடந்தது. அருண ஜயசேகர 2024 இல்தான் பிரதி அமைச்சரானார். இக்காலப்பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம். இதனை அவர்கள் செய்யவில்லை.
நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். பிரதி அமைச்சர் சிஐடிக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் எதையும் மறைக்கமாட்டோம். அனைத்து வெளியிடப்படும். பாதக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும்.”- எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.