உறுமய வேலைத்திட்டத்தை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு

காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) நடைபெற்ற “உறுமய” காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தின் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவினால் காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவற்றை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மரதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

அதற்கமைய வாலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 235 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதோடு, இந்த காணிகள் அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விதைப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனையடுத்து காணி உரிமை பெற்றவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை நினைவாக மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

Related Articles

Latest Articles