‘உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த இடமளியேன்’ – மஹிந்த

உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் சர்வதேச தலையீட்டுடன் பிரச்சினைகளுக்கு தீர்வைகாண்பதற்கும் தயாரில்லை – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியதாவது,
” நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்துக்கு 69 லட்சம் வாக்குகளை வழங்கி மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு  மக்கள் அனுமதி வழங்கிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பலமானதொரு நாடாளுமன்றம் செயற்படவேண்டும். ஜனாதிபதிக்கு எதிரான கட்சியொன்று நாடாளுமன்றத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் முன்நோக்கி பயணிக்கமடியாத நிலை ஏற்படும்.
ஜனாதிபதி சொல்வதை நாடாளுமன்றமும், நாடாளுமன்றம் கூறுவதை ஜனாதிபதியும் செய்யாவிட்டால் நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கசபைக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படும். கடந்த ஆட்சியின்போது இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, எமது நாட்டு பிரச்சினைகளை நாமே தீர்ப்போம். அவற்றை சர்வதேச மயப்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. அதேபோல் உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசத்திடம் முன்வைத்து, தீர்வை பெறுவதற்கும் தயாரில்லை.
கடந்த அரசாங்கமானது இராணுவத்தை சிறையில் அடைத்து, என்.ஜி.ஓ. காரர்களை பாதுகாத்தது. அவர்களுக்கு சர்வதேசத்திடமும் சம்பளம் கிடைத்தது. புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்பட்டது. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. பாதாள குழுவினர் தலைதூக்கினர். இவற்றுக்கு நாம் முடிவுகட்டுவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles